×

காயிதே மில்லத் நகர் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது

திருப்பூர் : காயிதேமில்லத் நகர் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என, கலெக்டரிடம் ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை  மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் வினீத் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பத்ஹல் இஸ்லாம் அஹ்லுஸ் ஜூன்னத் வல் ஜமாத் மஸ்ஜித் மற்றும் மதரஸா நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:நீதிமன்ற உத்தரவுப்படி ஓடை புறம்போக்கு பகுதியான சத்யா நகர், சுகுமார்நகர், காயிதேமில்லத் நகர், சபாஷ்நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு மாற்றாக காயிதேமில்லத் பள்ளிவாசல் பின்புறம், தற்போது மாநகராட்சி சார்பில் கழிவுநீர் மறுசுழற்சி செய்வதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும். எனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

அலகுமலை மாதேஸ்வராநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு நிலம் விலைக்கு வாங்கி, வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலர் வீடு கட்டியுள்ளனர். சிலர் குடிசைகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் எங்களுக்கு இதுவரை வீட்டுவரி, வீட்டு எண், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை பஞ்சாயத்து சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வீடு கிடைக்கவும், ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்கவும், வீட்டு வரிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

இந்திராநகரை சேர்ந்த தேவகி கூறுகையில், கடந்த 2015 ம் ஆண்டில் ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் வீட்டுமனைகள் விற்பனை செய்வதாக அறிவித்தார். இதனை நம்பி நான் 2 சென்ட்டில் வீட்டுமனை ரூ.4.50 லட்சம் என பேசி, ரூ.1 லட்சம் அட்வான்ஸ் தொகையாக செலுத்தினேன். அதன்படி 2015 முதல் 2020 வரை பல்வேறு காலகட்டங்களில் முழுத்தொகையையும் செலுத்திவிட்டேன். ஆனால் இதுவரை வீட்டு மனையை கிரையம் செய்து கொடுக்காமல் உள்ளார். எனவே எனக்கு வீட்டுமனை கிடைக்க நடடிவக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கோரினார்.

அம்மாபாளையம் கணபதிநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அவினாசி தாலுகா திருமுருகன்பூண்டி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட அம்மாபாளையம் கணபதிநகரில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ளவர்களுக்கான வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என்றனர்.

உடுமலை லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களது பகுதியில் 3 தலைமுறைகளை வசித்து வருகிறோம். இந்த பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் எந்தவித நீர்வரத்தும் இல்லை. வறண்டு கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் நாங்கள் வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரினர்.

இதைத்தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அண்ணாத்துரை அளித்த மனுவில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் சில நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். எனவே ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : Kaithe Millat Nagar , Tirupur: Jamaat officials have petitioned the Collector not to set up a sewage treatment plant in Kaithemillath Nagar area.
× RELATED பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியது!